நிமி குறித்து வியாசர் பரிதாபத்தோடு சொன்னதைக் கேட்ட ஜெனமேஜெயன் தானும் சேர்ந்து நிமிக்காக வருந்தினான்.

""அயோத்தியின் சூரிய குலத்தில் வந்தவருக்கே இப்படி ஒரு நிலை என்பதை எண்ணும்போது வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. பிறகு என்னாயிற்று?'' என்று தன் ஆர்வத்தைத் தொடர்ந்தான்.

""என்னாகும்? நிமிபோல் ஒரு உடலை மாவுகொண்டு செய்த நிமியின் ரிஷிகள், நிமி பாதியில் விட்டுச்சென்ற யக்ஞத்தை அந்த செயற்கை உடல்முன் தொடர்ந்தனர்.

எப்போதும் யாகமோ ஹோமமோ பாதியில் தடைபடக்கூடாது. எனவேதான் அவர்கள் தொடர்ந்தனர். அங்கே காற்றாய் அலைந்த நிமியும் அந்த வேள்வியில் பங்குகொண்டான்.

Advertisment

உருவத்தை இழந்த நிலையிலும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதுபோல் வேள்வியைத் தொடர்ந்து செய்தமையால் வேள்விக்குப் பயனாக தேவர்கள் தோன்றி நிமிக்கு அவன் உடம்பைத்தர சித்தம் கொண்டனர்.

ஆனால் நிமி அந்த உடம்பை மறுத்ததுதான் விந்தை!'' வியாசர் இப்படிக் கூறவும் ஜெனமேஜெயன் அதிர்ந்தான்.

""உடம்பின்றி கஷ்டப்படுபவர் உடம்பை ஏன் வேண்டாம் என்கிறார்?

Advertisment

இவர்போல் வசிஷ்டர்கூட நடந்துகொள்ளவில்லையே...'' என்றான்.

""ஆம்... வசிஷ்டர் வேறுவிதத்தில் தன் உடலைப் பெற்றுக்கொண்டார். அதனால் அகத்தியரின் சகோதரர் என்றாகும் ஒரு உறவும் கிடைத்தது. மித்ரவர்ணரும், ஊர்வசியும் தாய்- தந்தையாகக் கருதப்படும் ஒரு நிலையும் தோன்றியது. சுருக்கமாகக் கூறுவதானால் சாபத்தால் தன் உடலை இழந்து புதிதாக உடலைப் பெற்றபோது, புதிய உறவுத் தொடர்புகள் உருவாகிவிட்டன! ஒரு சந்நியாசி எனப்படுபவன் முற்றிலும் துறந்தாலே மீண்டும் பிறவா நிலை ஏற்படும். தான் வாழும் நாளில் சகல உறவுகளையும் துறந்துதான் சந்நியாசியாகிறான். ஆனால் இங்கோ புதிய உறவுகள் தோன்றிவிட்டன.

ஒரு தாய்- தந்தையர்க்கு ஒரே ஒரு பிள்ளைதான் என்றால் அந்தப் பிள்ளை சந்நியாசியாக முடியாது. ஏனென்றால் தாய்- தந்தையர் இறப்புக்குப்பின் செய்யவேண்டிய பித்ரு காரியங்களை செய்யமுடியாமல்போய் தாய்- தந்தையர் பித்ருலோகத்தில் தவிக்கும் நிலை தோன்றிவிடும். எனவேதான் ஒரு பிள்ளைக்கு சந்நியாசமில்லை எனும் நிலை தோன்றியது. நான்கைந்து பிள்ளைகள் உள்ள நிலையில் அதில் ஒருவர் சந்நியாசியாக விரும்பினால் அதில் பிழையில்லை. இன்று மடாதிபதி ஆவோர் அப்படித்தான் உள்ளனர்.

இதையெல்லாம் அறிந்தே நிமி திரும்ப உடலைப்பெற விரும்பவில்லை. அதுமட்டுமல்ல; உடம்பில்லாத நிலையில் ஆத்ம சரீரத்தோடு வாழும் வாழ்வுதான் நிலையானது... ஒரு உடம்பில் வாழும் வாழ்வு அநித்யமானது என்கிற ஞானமும் நிமிக்கு ஏற்பட்டுவிட்டது. திரும்ப ஒரு உடம்பைப் பெற்றாலும் அது ஒருநாள் முதுமை கண்டு நெருப்புக்கோ, மண்ணுக்கோ இரையாகும். அதன்பின் இதே ஆத்ம உடம்புதான் அப்போதும் மிஞ்சும். எனவேதான் தனக்கு மீண்டும் உடல் தேவையில்லை என்று நிமி முடிவு செய்தான்.

"சரி... உடல் தேவையில்லை என்றால் வேறு என்னவேண்டும் கேள்...' என்றனர் யக்ஞத்தில் தோன்றிய தேவதேவர்கள். "இந்த உலகில் எல்லாருக்கும் கட்டாயம் தேவைப்படுவது காற்றே. காற்று இருந்தாலே உயிரானது வாழ்ந்து இயங்க முடிகிறது. காற்றோ கண்களுக்குப் புலனாகாதது. புலனாகக்கூடியதோ ஒளியாகும்.

எனவே புலனாகியும் ஆகாததுமான தன்மை எந்த உயிரிடமும் கண்களிடமும்தான் உண்டு. அப்படிப்பட்ட உயிர்களின் கண்ணாகவும், கண்ணைக் காக்கும் இமையாகவும் நான் இருக்க விரும்புகிறேன்' என்றான் நிமி.

விசித்திரமான அவன் கோரிக்கையை ஈடேற்றும் சக்தி யக்ஞதேவர்களுக்குக் கிடையாது. எனவே அவர்கள் மறுமொழி கூறினர்.

"நிமி! உன் கோரிக்கை மிக விசித்திரமானது! சிருஷ்டி சார்ந்தது. உலக உயிர்களின் சிருஷ்டிகர்த்தா பிரம்மா... பிரம்மாவையே சிருஷ்டித்தவர் அந்த மாலவர். அந்த மாலவரின் சக்தி அம்சமாக விளங்குபவள் தேவிமாதா. இந்த தேவிமாதாவால் மட்டுமே உன் விருப்பத்தை ஈடேற்ற முடியும்...' என்றனர் யக்ஞதேவர்கள். உடனேயே நிமியும் தேவி குறித்து ஆத்மதியானம் புரியத் தொடங்கினான்.''

இவ்வாறு வியாசர் கூறிமுடிக்கவும் ஜெனமே ஜெயனிடம் பல கேள்விகள் இதுகுறித்துக் கேட்பதற்காக அணிவகுத்து நின்றன. வியாசரும் கேட்கச் சொன்னார்.

""குருவே... நிமி ஒரு அரசன்... அதிலும் மனுவால் உருவான சூரிய பரம்பரையில் வந்தவன். இவன் உடம்பை துச்சமாகக் கருதும் சூழலே இல்லை.

அப்படியிருக்க இப்படிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக மட்டுமில்லை. இப்படி நேத்திரத்தில் கிடப்பதில் என்ன பெருமை இருக்கிறது?''

""சரியாகத்தான் கேட்டுள்ளாய் ஜெனமேஜெயா. எப்போதும் கேள்விகள் என்பவை நாமறிந்துள்ள அளவிற்கேற்ப மட்டும் இருக்கும். அதனாலேயே நீ இப்படிக் கேட்டாய். உண்மையில் உன்னுள்ளும் என்னுள்ளும்கூட நிமி பெற்ற வரசித்தி உள்ளது. ஆம்... நிமி இப்படி ஒரு வரத்தைக் கேட்கும் முன்வரை இமைகளால் கண்களை மூடமுடியாத ஒரு உயிரினமாகவே நான், நீ, நாம் மற்றும் சகல உயிர்களும் இருந்தன. இந்த வரத்தை நிமியின் தவத்துக்கு ஆட்பட்டு தேவி வழங்கவும்தான் நம் கண்களை நாம் காற்று பலமாக வீசும்போது இமைகொண்டு மூடி, பாதுகாத்துக்கொள்ள முடிகிறது. அதேபோல் காற்றில்லாவிட்டால் கண்கள் காய்ந்து பார்வையும்போய், கண் என்பதே உடம்பின் ஒரு உபயோகமில்லாத திசு என்றாகிவிடும். நமக்கு அப்படியொரு நிலை இல்லாமல் போகக்காரணமே நிமிதான்!'' என்று நீண்ட விளக்கமளித்தார் வியாசர்.

""என்றால் எதற்காக இப்படி ஒரு குறையோடு அந்த பிரம்மன் உயிர்களைப் படைத்தார்? அப்போது உயிரினங்கள் எப்படித் தூங்கினார்கள்?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் ஜெனமேஜெயன்.

""அப்போதும் கண்களை மூடியே தூங்கினர். இமை மூடினாலே தூக்கமும் வரும். ஆனால் நினைத்தபோதெல்லாம் மூடிக்கொள்ளவும், படபடப்போடு இமைக்கவும் இயலாத நிலையே முன்பு இருந்தது'' என்றார் வியாசர்.

""உங்கள் பதிலால் எனக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை. ஆயினும் பலவிதமான மனப்போக்குடைய மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளதையே உங்கள் கூற்றுக்களால் நான் உணர்கிறேன். போகட்டும்... அதன்பின் என்னாயிற்று?''

yathum

""என்னாகும்? அம்பிகை தோன்றி நிமிக்கு அவன் கேட்ட வரத்தைத் தந்தாள். இதனால் நேத்திரங்களுக்கு நிமி என்றொரு பெயரும் உண்டானது. அதேசமயம் அவன் நிமித்தம் செய்த மாவு உடம்பைக் கொண்டு வேள்வி செய்த ரிஷிகள், அவனுக்குப் பின் வாரிசுகள் இல்லாமல் போய்விடக்கூடாது என்று கருதி, அந்த மாவு உடம்பை யக்ஞத்துக்கு பயன்படுத்தும் அரணிக்கட்டையை தொப்புள் பாகமான மையத்தில் வைத்து மந்திரங்கள்கூறிக் கடைந்தனர். இதனால் அந்த மாவு உடம்பிலிருந்து புதிதாக ஒரு யுவபுருஷன் தோன்றினான்.

அரணிக்கட்டையால் தோன்றியதால் மிதி என்றும், பிள்ளை வேண்டும் என்கிற காரணம் கருதி வம்சத்தொடர்ச்சியாக தோற்றுவிக்கப்பட்டவன் என்பதால் ஜனகன் என்றும் அவன் அழைக்கப்பட்டான். அவன் தோன்றிய விதத்தையே காரணமாகக் கொண்டு அவன் ஆளத் தலைப்பட்ட நாடு மிதிலாபுரி என்றானது.

தேகமில்லாத தேகத்தில் இருந்து தோன்றிய ஜனகனும், அவன் வாரிசுகளும் தேகமில்லா கேவர்கள் எனும் பொருளில் விதேக தேகமுடையவர்கள் என்று அழைக்கப்பட்டனர்!''

"தேகமில்லா தேகர்கள்' என்று வியாசர் கூறவும் ஜெனமேஜெயனிடம் விழிகள் விரிந்த வியப்பு.

""தேகமில்லா தேகர்கள்... பலே! தாய்- தந்தை சேர்க்கை, விந்து சுரோணிதக் கலப்பு என்று எதுவுமின்றி, மந்திர சித்தியால்கூட மனிதர்கள் பிறப்பார்கள் என்பதே ஆச்சரியமாக உள்ளது. இவர்களை தேகமில்லாத தேகர்கள் என்பதும் வியப்பே.

இதெல்லாம் பிரம்மனின் சிருஷ்டிக்கு உட்பட்டதா அல்லது மீறிய செயல்பாடுகளா?'' என்று கேட்ட ஜெனமேஜெயனிடம், ""இதுவும் ஒரு விதத்தில் பிரம்மசிருஷ்டியே...'' என்றார் வியாசர்.

""குருவே... இதுபோல மாறுபட்ட பிரம்மசிருஷ்டிகள் இந்த உலகில் மேலும் உள்ளனவா?''

""நிறைய உண்டு. அரணிக்கட்டையிலிருந்து ஜனகர் தோன்றியதுபோல தொடையிலிருந்து பிறந்த ஒருவரும் இருக்கிறார். அவர் பெயர் பார்கவர்'' என்ற வியாசரை அதிர்வோடு பார்த்தான் ஜெனமேஜெயன். பின், ""தொடையிலிருந்து எப்படி ஒருவர் பிறக்க முடியும்?'' என்று கேட்டான்.

""அது எப்படியென்றால் நான் கார்த்தவீர்யார்ஜுனன் என்கிற ஆயிரம் கரங்களைக் கொண்ட ஒரு அரசனின் வரலாற்றிலிருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் உன்னால் நான் கூறவருவதைக் குழப்பமின்றி புரிந்துகொள்ள முடியும்'' என்றார் வியாசர்.

""தாராளமாகக் கூறுங்கள்... அம்பிகையின் பிரதாபாங்களுக்கும் இந்த வினோதபுருஷர்களுக்கும் தொடர்புள்ளதுதானே?''

""அது எப்படி இல்லாமல் போகும்? நீ கேள்வி கேட்க, நான் பதில்கூற அடிப்படையாக ஒரு சக்தி தேவை. அந்த சக்தியே அவள்தான். அதனடிப்படையில் அவளின்றி அணுவும் அசையாது என்றும் கூறலாம்.''

""சரி சரி... கார்த்தவீர்யார்ஜுனன் கதையைக் கூறத்தொடங்குங்கள்.''

""பார்த்தாயா... உன் தந்தையின் மரணம்கூட உன்னைப் பெரும் ஞானியாக்குவதை...''

""என்ன கூறுகிறீர்கள்?''

""பரீட்சித்துவை பாம்பு கடிக்கப்போயே அவன் இறந்தான். அதற்கு அவன் கோபத்தால் செய்த ஒரு தவறே காரணம். அவன்பிள்ளையான நீ அவனுக்கு முக்தி கிட்ட வேண்டுமென்று என்னைக் கொண்டு தேவி பூஜை செய்ததோடு, தேவியின் பெருமைகளையும் கேட்டு வருகிறாய். இதனால் எனக்கு தேவியின் பெருமைகளைக்கூறும் பாக்கியமும் புண்ணியமும் கிடைக்கிறது. உனக்கும் அகத்திலும் புறத்திலும் விழிப்பு ஏற்பட்டு ஞானம் உண்டாகிறது.

ஒரு தேவபுருஷனோ அல்லது மானிடனோ தவறு செய்தாலும் அது நன்மையில்தான் முடிவடையும் என்பது இதனால் புலனாகிறது.

ஆனால் இப்படியொரு நிலை அசுரர்கள் வரையில் ஏற்படாது. அவர்கள் அகங்காரத்தோடும், ஆத்திரத்தோடும் நடந்து, தானும் அழிந்து தன்னைச் சார்ந்தவர்களையும் அழிப்பார்கள்.''

""உண்மைதான்! சிந்தனைக்குரிய இந்த விஷயத்தைக் கேட்டு நான் மகிழ்கிறேன் குருவே. நீங்கள் கார்த்தவீர்யார்ஜுனன் கதையைக் கூறுங்கள்.''

""கூறுகிறேன். கார்த்தவீர்யார்ஜுனன் என்பவன் அயயர்கள் எனப்படும் வம்சாவளியைச் சேர்ந்தவன். இவன் பிறக்கும்போது கையுமின்றி காலுமின்றி ஊனக்குழந்தையாக தாய்- தந்தையர்களுக்குப் பிறந்தவன்! அதற்குக் காரணம் இவனது நாட்டு மக்களின் பாவங்களே!

அதாவது ஒரு மன்னன் எந்தத் தவறும் செய்யாது வாழ்ந்தபோதிலும் அவனது நாட்டு மக்கள் செய்யும் பாவங்கள் அவனைத்தான் சென்று சேரும். அந்த பாவத்தாலேயே ஒரு ஊனக்குழந்தையாகக் கார்த்தவீர்யார்ஜுனன் பிறந்தான்! பின் வளர்ந்தான். இவன் தந்தை இறக்கவும் இவனே பட்டத்துக்கு வரவேண்டியிருந்தது. ஆனால் கார்த்தவீர்யார்ஜுனன் அரசனாகப் பதவியேற்க சம்மதிக்கவில்லை.

"கையும் காலுமில்லாத ஊனமுள்ள நான் நாடாளத் தகுதியற்றவன். அப்படியே ஆண்டாலும் மக்கள் பாவங்களுக்கு நானே பொறுப்பேற்க வேண்டியிருப்பதால் எனக்கு இந்த அரசபதவி தேவையில்லை. இதற்கு நான் இறந்துவிடுவது மேல். தயவுசெய்து விஷத்தைக் கொடுத்து என்னைக்கொன்றுவிடுங்கள்' என்று கதறினான்.

இதை கவனித்த இவனது ராஜரிஷிகள் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு நல்வழி காட்டத் தீர்மானித்தனர்.

"அரசனின் வாரிசே! ஆசையில்லாத மனது உன் மனது. உன்னை வாழ்த்துகிறோம். ஆனால் நீ பதவியேற்க மறுத்தால் இந்த அரசை யார் ஆள்வது எனும் குழப்பம் ஏற்படும். அதனால் போட்டி உருவாகி, பகை உருவாகி நாடே அழிந்தாலும் அழிந்துவிடும். இப்படியாகக்கூடாது என்றே அரசவம்சம் தோற்றுவிக்கப்பட்டது. எனவே மக்களின் நலன் கருதி பதவியேற்றுக்கொள். அவர்கள் பாவங்கள் உன்னைச் சேராமலிருக்க ஒருவழியுள்ளது. அதை நாங்கள் கூறுகிறோம். அதன்படி நடந்தால் ஒருகைகூட இல்லாத நீ ஆயிரம் கரங்களுக்கு அதிபதியாவாய்!' என்றனர்.''

(தொடரும்)